சிறந்த விவசாயிகளுக்கு இனிவரும் ஆண்டு முதல் விருது...!!!

சிறந்த விவசாயிகளுக்கு இனிவரும் ஆண்டு முதல் விருது...!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிமுதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இந்த வேளாண் பட்ஜெட்டானது  திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டாகும்.  சிலப்பதிகாரத்தின் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ பாடலை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறார் அமைச்சர்.

தனி தொகுப்புத் திட்டம்:

உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேம்பாட்டுத் திட்டம்: 

பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.

பண்ணைச் சுற்றுலா: 

வேளாண்மையில் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

முந்திரி சாகுபடி:

முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஹெக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் முந்திரி சாகுபடி திட்டம் தொடங்கப்படவுள்ளது.

வேளாண் இயந்திரங்களுக்கு:

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை மையங்கள் உள்ளிட்டவைக்கு ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு. 

பாசன நீர்: 

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் 1,32,000 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறும்.

புவிசார் குறியீடு: 

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது: 

அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.  இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

இதையும் படிக்க:   வேளாண் பட்ஜெட்2023: விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படுமா?!