கர்நாடக தேர்தல் களத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக...!!

கர்நாடக தேர்தல் களத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக...!!
Published on
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் சிவமொகா நகரில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் அண்ணாமலை முன்னிலையில் தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை பாட வைத்துள்ளார் ஈஸ்வரப்பா.

கர்நாடக மாநிலத்தில் சிவமொகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமொகா தமிழ் சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ் சங்கமாக திகழ்ந்து வருகிறது.

இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் நேற்று பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டார்.

கூட்டம் துவங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர். தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடிக்கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். மேலும் மேடையில் இருந்த தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு பாடி கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த வைத்தார். பின்பு பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட நாட்டு கீதத்தை பாடும் படி அவர் வலியுறுத்திய நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் ஒலிபெருக்கி மூலமாக கன்னட நாட்டின் கீதத்தை பாட வைத்தனர். 

தேர்தல் களத்தில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்க வந்த பாஜக கட்சித் தலைவர்கள் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ் தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com