கொட்டித் தீர்க்கும் கனமழை; அருவிகளில் குளிக்கத் தடை!

கொட்டித் தீர்க்கும் கனமழை; அருவிகளில் குளிக்கத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்கிறது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தளமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சாரல் மழையுடன் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் கடந்த ஜூன் மாதம் முழுவதும் குற்றால அருவிகள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து வந்தனர். அவ்வப்போது அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தடை விதிக்கப்பட்டும் வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  நேற்று மாலை 6 மணியில் இருந்து அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

நேற்று நள்ளிரவு முதல் குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அபாய வளைவு, தடாகத்தை கடந்து பாலம் வரையில் வெள்ள நீர் சீறிப்பாய்ந்து வருகிறது. இதே போன்று பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை படிகட்டுகள் வரை வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. மேலும் ஐந்தருவியின் 5 கிளைகளும் ஒன்றாக இணைந்து ஒரே அருவியாக மாறி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குற்றால அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளிப்பதற்காக வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதே நேரத்தில்  குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் சிற்றாறு மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க | மீண்டும் கலைகட்ட தயாராகும் மாமல்லபுரம்; சர்வதேச காற்றாடி திருவிழா அறிவிப்பு!