அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்றுகை போராட்டம்....!!!

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்றுகை போராட்டம்....!!!
Published on
Updated on
1 min read

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 11-ம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

நேற்று திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கு. வெங்கடேசன், இரா. தாஸ் மற்றும் கு. தியாகராஜன் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்றனர்.   நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.  கடந்த 27.03.2023 அன்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள‌ மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - பணியாளர்கள் பல இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள் என்று உண்மைக்கு புறம்பாக பேசியதோடு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சமூக நீதிக்கு எதிராகவும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை பறித்து, TNPSCயை முழுமையாக ஒழித்துக் கட்டி, அத்துக்கூலி முறையில் நிரந்தரம் பணியிடங்களை அகற்றி, வெளிமுகமை மூலமாக பணியாளர்களை அமர்த்துவதற்காக மனித வள மேலாண்மை துறையால் அரசாணை 115ல் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்புகளை இரத்து செய்தது சரியில்லை என்று பேசியதற்கு ஜாக்டோ ஜியோ கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

2.  கடந்த இரண்டாண்டுகளில், மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத் தளங்கள் வாயிலாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் மீது வெறுப்புணர்வோடு பேசியதை தற்போது சட்டமன்றத்திலேயே அரங்கேற்றம் செய்ததற்கு கடும் கண்டனத்தை ஜாக்டோ ஜியோ தெரிவித்துக் கொள்கிறது.

3.  ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கை சாசனம் அனைத்து பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக எதிர்வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வழங்குவது
அதே நாட்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் பெருமக்களையும் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை சாசனம் அளிப்பது.

4.  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 11ல் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தினை நடத்துவது.

5.  ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை ஜாக்டோ ஜியோ விடுக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com