"பயிரை அறுவடை செய்யும் வரை காத்திருக்க முடியாதா?" என்.எல்.சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

"பயிரை அறுவடை செய்யும் வரை காத்திருக்க முடியாதா?" என்.எல்.சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்,  பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

என் எல் சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு,  வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, என்எல்சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார். என்எல்சி பணியாளர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் என்றும், அதற்காக பணத்தை செலவிடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளை எதிர்ப்பு கிளம்பியது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, பத்தாண்டுகளுக்கு முன்பாக இழப்பீடு தொகை கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிலத்தை சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி, 20 ஆண்டுகளாக நிலத்தை கையகப்படுத்தாமல் பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என கேள்வி எழுப்பினார். மேலும், பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி வேதனை தெரிவித்தார். மேலும், "வாடிய பயிரைப் கண்டபோதெல்லாம் வாடினேன்" எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை என்றும்,  நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். 
 
ஒரு பயிர் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மனிதன் உள்ளிட்ட அத்தனை ஜீவ ராசிகளுக்கும் வாழ்வாதாரமாக பயிர்கள் இருப்பதாகவும்,  இழப்பீடு பெற்றாலும் பயிர்கள் அழிக்கப்படுகிறதே என கோபம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க போகிறோம் என்றும், அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக் கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத் தான் போகிறோம் என்றும், அப்போது நிலக்கரி பயன்படாது என்பது தனது கருத்து என தெரிவித்த நீதிபதி, இதற்காக என்.எல்.சி. கோபித்து கொண்டாலும் பரவாயில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் கதாபாத்திரங்கள் ஊடே பயணக்கும் நெய்வேலி, அணைக்கரையை ஒட்டி கொள்ளிடம் பாய்ந்து ஓடும் அழகை மறக்க முடியாது என குறிப்பிட்ட அவர், அந்த இடங்கள் எல்லாம் தற்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்த நீதிபதி, சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமையை  என்எல்சி போன்ற நிறுவனங்களால் இந்த பகுதிகள் இழந்துவிட்டதாக கவலை தெரிவித்தார்.

பூமியைத் தோண்டி தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் பெரும் கவலையாக உள்ளதாகவும்,   மேற்கு தொடர்ச்சி மலையில் கை  வைத்தால் தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய பருவ மழை சுத்தமாக நின்றுவிடும் எனவும் எச்சரித்துள்ளார். காவிரி டெல்டா, தாமிரபரணி பகுதி, வட தமிழகத்தில் சில பகுதிகள் போன்ற மூன்று இடங்களில் தான் நெற்பயிர் பாசனம் உள்ளதாகவும், அதை அழித்துவிட்டால் அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என என்எல்சி கூறுவதை சுட்டிக்காட்டி, எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும் பணத்தை வைத்து விவசாயி என்ன செய்வார்? என கேள்வி எழுப்பினார்.  ஒரு ஏக்கர் நிலத்தை வைத்தே மகாராஜா போல் வாழ்ந்த ஒரு விவசாயி, பல மடங்கு பணம் கொடுத்தாலும் மற்றவர்களிடம் வேலைபார்க்க மனமில்லாமல், வெளியூர்களுக்கு சென்றுவிடுவதாகவும், சொந்த ஊரை விட்டு வெளியில் போனால் அவருடைய வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடும் என்றும் கவலை தெரிவித்தார்.மேலும், மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகளும் புரிந்து கொள்வதில்லை என்றும்  இயந்திரத்தனமாக செயல்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கிடையில், வழக்கு விசாரணையின் போது என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அறையில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள், ஏசி ஆகியவற்றிற்கு நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் தான் காரணம் என குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி, இன்று நாள் முழுவதும் தனது விசாரணை அறையில் இருக்கக்கூடிய ஏசியை அணைத்து வைக்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். பூமியில் இருக்கக்கூடிய அனைவரும் ஏசி காற்றில் வாழ்வதில்லை என்றும், புங்கை மர காற்றிலும், வேப்ப மர காற்றிலும் இளைப்பாறுபவர்கள் ஏராளமாக இருப்பதாக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, இதை அதிகாரிகள் உணரும்படி எடுத்துக் கூறுங்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை; உயர்நீதிமன்ற நீதிபதி கோரிக்கை!