அதிமுகவினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் வழக்குப்பதிவு.... வடசென்னையில் பரபரப்பு..!!

அதிமுகவினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் வழக்குப்பதிவு.... வடசென்னையில் பரபரப்பு..!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்திய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உட்பட பல அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.  அதனடிப்படையில் ஆர் கே நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் உள்ள சேனி அம்மன் கோவில் தெருவில் அதிமுக சார்பில் பொது கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அதையும் மீறி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.  பொதுக்கூட்டம் நடத்தியதில் அனுமதி இல்லாமல் கட்சி விளம்பர பதாகைகள் வைத்தது, எல்இடி திரைகள் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி  பற்றி பொய் செய்திகளை ஒளி பரப்பியது உட்பட பல்வேறு புகார்கள் குறித்து திமுக 42 வது வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் துறையினர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ், பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, 42 வது வட்ட செயலாளர் எஸ் ஆர் அன்பு உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அதனுடன் கூடுதலாக சட்டவிரோதமாக மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், தொல்லை கொடுத்தல், போதிய பாதுகாப்பு இல்லாமல் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   உதவி வேண்டி வீடியோ வெளியிட்ட பிதாமகன் தயாரிப்பாளர்...!!