சென்னை மெட்ரோ திட்டத்தில் மாற்றம்... நீதிமன்றத்தில் வழக்கு!!

சென்னை மெட்ரோ திட்டத்தில் மாற்றம்... நீதிமன்றத்தில் வழக்கு!!
Published on
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை, அதன் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லுார் வரையிலான வழித் தடத்தில் மாதவரம் பால் பண்ணை மற்றும் மூலக்கடைக்கு இடையில், தபால் பெட்டி  நிறுத்தம் அமைக்க 2018ல் திட்டமிடப்பட்டது.  ஆனால் தற்போது தபால் பெட்டி நிறுத்தத்தை நீக்கிவிட்டு, முராரி மருத்துவமனை நிறுத்தத்தை அமைக்கும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து மாதவரம் கே.கே.ஆர். நகர் குடியிருப்பு வாரிய நலச் சங்கத்தின் செயலாளர் லூர்துராஜ் தாக்கல் செய்த மனுவில், தபால்பெட்டி மெட்ரோ நிலையம் இல்லாவிட்டால் குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் அவதி அடைவார்கள் என்றும், இரவு நேரங்களில் ஆட்டோக்கள் எதுவும் கிடைக்காமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.  தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், அலுவலகம், பள்ளி மற்றும் வீட்டிற்கு செல்லும் நேரத்தை குறைக்கும் வகையிலும் இருக்கும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தபால்பெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை கைவிடுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றும், தபால் பெட்டி  மெட்ரோ நிலையம் இல்லாமல் தங்கள் குடியிருப்புகளின் கீழ் சுரங்க பாதை அமைக்கப்படும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்கும்படி  உத்தரவிட முடியாது என தெரிவித்ததுடன், திருத்தப்பட்ட சீரமைப்பு வரைபடத்தை 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சி.எம்.ஆர்.எல். தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, திருத்தப்பட்ட சீரமைப்பு வரைபடத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், சீரமைப்பு வரைபடத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சி.எம்.ஆர்.எல்லிற்கு உத்தரவிட்டதுடன், மாதவரம் பால்பண்னை முதல் முரராரி மருத்துவமனைக்கு இடைப்பட்ட தூரம் 1.5 கி.மீ என உள்ள நிலையில் தபால்பெட்டி மெட்ரோ நிலையம் அமைக்கும் பணி நிறுத்தபட்டதற்கான காரணத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com