வரலாற்றில் இல்லாத அளவிற்கு சித்திரை திருவிழா நடத்தப்படும்... அமைச்சர் சேகர் பாபு!!

வரலாற்றில் இல்லாத அளவிற்கு சித்திரை திருவிழா நடத்தப்படும்... அமைச்சர் சேகர் பாபு!!

சித்திரை திருவிழாவை எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவிலிலும், அழகர் ஆற்றில் இறங்கும் இடத்திலும் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு நடத்தினார்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.   அக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சேகர்பாபு பேசுகையில், மதுரை கள்ளழகர், மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்வுகளின் போது அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள் எனவும் திருக்கல்யாண நிகழ்விற்கு 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேரோட்டம் செல்லும் பாதைகள் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது வரும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர், போதிய அளவு மருத்துவ முகாம்கள் அதிகரிப்பது, சிசிடிவி கேமிராக்கள் அமைப்பு, மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கைகள், விஐபிகளுக்கு இந்த முறை கார் பாஸ் வழங்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சித்திரை திருவிழாவை சீரோடும் சிறப்போடும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூட்ட நெரிசலை தவிர்க்க பூங்காக்கள், கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்களை திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளோம் எனவும் கூறினார்.  

மேலும் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டு 800 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு, சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது எனவும் எந்தவித பணியும் விட்டுபோகாத வகையில் செயல்படவுள்ளோம் எனவும் தெரிவித்த அவர் வருகின்ற கூட்டத்தை பொறுத்து யாரும் அச்சமின்றி வந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது எனக் கூறியதோடு பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அனுமதியோடு மாட்டுவண்டிகளை நிறுத்தவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இதையும் படிக்க:   தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை....!!!