வீட்டு வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் லஞ்சம் கேட்கும் பேரூராட்சி அதிகாரிகள்...

கன்னியாகுமரியில் வீட்டு வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டு வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் லஞ்சம் கேட்கும்  பேரூராட்சி அதிகாரிகள்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர், வீட்டு வரைபட அனுமதி கோரி விண்ணப்பிப்பவர்களிடம் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கடன் பெற்று வீடு கட்டுபவர்கள் இறுதிக்கட்டமாக பணம் பெறும் போது, அதற்கும் பெருமளவில் லஞ்சம் வசூலித்ததாக, அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

அதற்கு பேரூராட்சியில் முக்கிய அதிகாரிகள் மற்றும் சில ஊழியர்கள் துணை போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ள சமூக ஆர்வலர் ராகவன், பொதுமக்களை வாட்டி வதைக்கும் இதுபோன்ற லஞ்சப் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.