சென்னையில் மாடு உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்; ஆணையர் தகவல்!

சென்னையில் மாடு உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்; ஆணையர் தகவல்!
Published on
Updated on
1 min read

சென்னையில் உள்ள மாடுகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் இராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ரோட்டரி கிளப் சார்பில் பள்ளியையும் அதை சார்ந்த சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களிடம் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அத்துடன் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளியை தூய்மையாக வைக்க குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டதுடன், பள்ளியில் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க இரண்டு இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார். 

அரும்பாக்கம் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பிறகு சுற்றி திரிந்த 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது  என தெரிவித்த அவர், ஒவ்வொரு மாடுகளை பிடிக்கும் போது கவனமாக, குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் மாடுகளை கவனமாக பிடிக்க்கிறோம் என தெரிவித்தார். மேலும், மாட்டையும் கன்றையும் பிரிக்க மாட்டோம் என தெரிவித்த அவர், பால் கொடுக்கும் மாடுகளை பால் கறப்பதற்கு உண்டான வசதிகளையும் செய்து வருவதாக கூறியுள்ளார். 

திருவல்லிக்கேணி உள்ளிட்ட சில இடங்களில் மாட்டு உரிமையாளர்களும் தனி இடம் கேட்பதாக கூறிய ஆணையர், ஆனால் மாநகராட்சி பகுதிகளில் இடம் கொடுப்பதற்கான சாத்தியம் குறைவு எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com