இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்கள்....!!

உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்கள்....!!

இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்களைத் திருடி விற்பனை செய்திருக்கும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைப்பற்றப்பட்ட தரவுகள்:

இந்த நிலையில் டேட்டா திருட்டு  கும்பலைச் சேர்ந்த குமார் நிதீஷ் பூஷன், குமாரி பூஜாபால், சுஷீல் தாமர், அதுல் பிரதாப் சிங், முஷ்கன் ஹாசன், சந்தீப் பால் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சைபராபாத் போலீசாரிடம்  இந்த கும்பல் சிக்கியுள்ளது. இக்கும்பலிடமிருந்து 12 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 2 சிபியூகள் மற்றும் தனிநபர்களின் 138 வகையான தரவுகளின் பட்டியல் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

திருட்டுக் கும்பல்:

இந்தியாவிலிருந்து சுமார் 16.80 கோடி பேரின் தகவல்களை 6 பேர் கொண்ட கும்பல் திருடி விற்பனை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.  இது இந்தியாவின் மிகப்பெரிய தகவல் மோசடி எனப் போலீசாரால் கூறப்படுகிறது.  சுமார் 1.10 கோடி வங்கி வாடிக்கையாளர்கள், 75 முகநூல் பயனர்கள், 1.2 கோடி வாட்ஸ்அப் பயனர்கள், 35 ஆயிரம் டெல்லி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 2.50 லட்சம் ராணுவ வீரர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கிறது.  மேலும் இந்தக் கும்பல், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல்களையும் திருடியது அம்பலமாகியுள்ளது.

யாருடைய தகவல்கள்:

இது குறித்து சைபராபாத் காவல் துறை ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.  அதில் வங்கி வாடிக்கையாளர்கள், முகநூல் பயனர்கள், ஐ.டி. ஊழியர்கள், அரசு ஊழியர்கள், நீட் தேர்வு மாணவர்கள், ராணுவ வீரர்கள், விமானிகள் ஆகியோரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.  பல்வேறு தகவல்களையும் திருடி 140 வகைகளாகப் பிரித்து பல கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அறிவுரை:

இதுபோன்ற தரவுகள் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரித்திருக்கும் காவல் துறையினர், 'இணையதளங்களில் சேவைகளைப் பெறுவதற்காக மக்கள் தங்களுடைய தரவுகளைத் தரும்போது தான் அதை இணையதளவாசிகள் ரகசியமாகத் திருடி விடுவதாகவும்  இதனால் சேவைபெறும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com