
கூலிங் பீர் வேண்டுமென்றால் கூடுதலாக காசு கொடுத்தால் தான் தரமுடியும் என மது பிரியரிடம் அரசு மதுபான கடை விற்பனையாளர் வாக்குவாதம் செய்துள்ளார்.
கூடுதலாக..:
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டின் அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகின்றது. இந்த மதுபான கடையில் மது வாங்க சென்ற மது பிரியர் ஒருவர் அரசு மதுபான கடையின் விற்பனையாளரிடம் டின் பீர் வேண்டுமென்று கேட்டுள்ளார். கடையின் விற்பனையாளர் குளிர்சாதன பெட்டியில் இருந்த டின்பீரை எடுத்து வந்து கொடுத்துவிட்டு அந்த பீர் பாட்டிலில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டுள்ளார்.
வாக்குவாதம்:
அதற்கு மது பிரியர் கூடுதலாக ஐந்து ரூபாய் தர மறுக்கவே கூலிங் பீரை திரும்ப பெற்றுக்கொண்ட விற்பனையாளர் மின் கட்டணம் செலுத்த வேண்டும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக கொடுத்தால்தான் வழங்க முடியும் என வாக்குவாதம் செய்து கூடுதலாக ஐந்து ரூபாய் தர முடியவில்லை என்றால் குளிர்ச்சி இல்லாத டின்பீரை வாங்கி செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை வாங்க மறுத்த மது பிரியருக்கும் விற்பனையாளருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
குற்றச்சாட்டு:
இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளில் குறைந்த விலையில் உள்ள மது பாட்டில்களுக்கு பத்து ரூபாயும் அதிக விலையுள்ள மது வகைகளுக்கு பாட்டிலுக்கு இருபது ரூபாய் கூடுதலாக கட்டாயப்படுத்தி விற்பனையாளர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என மது பிரியர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.