கொரானா பரவல்: வழக்கறிஞர்களே இனிமேல் நீதிமன்றம் வரவேண்டாம்!!!!

கொரானா பரவல்:  வழக்கறிஞர்களே இனிமேல் நீதிமன்றம் வரவேண்டாம்!!!!
Published on
Updated on
1 min read

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் வருவதற்கு பதிலாக காணொளியில் ஆஜராகும்படி வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பாதுகாப்பு கருதி அனைவரும் முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேரடி விசாரணையுடன் காணொலி வாயிலான விசாரணையிலும் பங்கேற்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஏப்ரல் 17ஆம் தேதியான நேற்று முதல் நீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென அறிவித்ததுடன், நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்குவதற்கு முன்பாக, முறையீடு செய்வதற்காக பல வழக்கறிஞர்கள் முதல் அமர்வில் குழுமியிருந்தனர்.

அவர்களை பார்த்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே காணொலி விசாரணையை பயன்படுத்தும்படி அறிவித்துள்ளதால், நீதிமன்ற அறைக்கு வருவதை தவிர்த்து காணொலி முறையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார்.

நான்கைந்து நீதிபதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியபட்டுள்ளதாக தெரிவித்ததுடன், நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com