”ராஜா மந்திரியாக முடியாது” விமர்சனத்தை உடைத்தெறிந்து ”மந்திரியானார் டி.ஆர்.பி.ராஜா”

”ராஜா மந்திரியாக முடியாது” விமர்சனத்தை உடைத்தெறிந்து ”மந்திரியானார் டி.ஆர்.பி.ராஜா”

விமர்சனங்களை தகர்த்தெறிந்து மன்னை எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்றைய தினம் திமுக அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் பேசப்படுபவர் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தான். திமுகவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மகனாக பிறந்தவர் தான் தற்போதைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற இவர், மன்னார்குடி தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என 3 முறை எம்.எல்.ஏவாக தேர்வானார். அத்துடன் 2021 ஆம் ஆண்டில் திமுகவின் என்.ஆர்.ஐ விங்கின் முதல் செயலாளராக ராஜா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

இவர் தற்போதைய திமுகவில் மன்னார்குடி எம்.எல்.ஏவாகவும், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும், சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவராகவும், சட்டப்பேரவை மாற்று சபாநாயகராகவும் பதவி வகித்து வருகிறார். இப்படி அரசியலில் முழுவீச்சாக செயல்பட்டு வரும் இவர், ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்கிறார். சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால்  "My Dear Young Boy" என்று அழைக்கப்பட்டது அப்போது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. திராவிட சித்தாந்தத்தை திராவிட மேடைகளில் பேசும் சிறந்த பேச்சாளராக திகழ்ந்த இவரின் மின்னும் மன்னை எனும் முன்னெடுப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் சபையில் குறிப்பில்லாமல் டேட்டாவை எடுத்து வைப்பதிலும் மிகுந்த வல்லவராக விளங்கினார். 

மன்னார்குடியில் 3 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை, ஆனால், இவரின் நண்பர் அன்பில் மகேஷ்க்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் சிலர் உங்கள் நண்பருக்கு அமைச்சர் பதவி கிடைத்த போதும் கூட, உங்களுக்கு கிடைக்க வில்லையா என்று பேசுபொருளானது. அதிலும் சிலர், மந்திரி ராஜாவாகலாம்; ஆனால், ராஜா மந்திரியாக முடியாது என கிண்டலாக விமர்சித்திருந்தனர். 

இந்த விமர்சனத்தையெல்லாம் கடந்து சென்ற டி.ஆர்.பி.ராஜா, திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைக்கும் எதிர்க்கட்சிக்களுக்கு தனது சமூக வலைதளம் மூலமாக தக்க பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழப்போவதாக தகவல் வெளியானது. அதிலிருந்தே, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு திமுக அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. ஏனென்றால், ஏற்கனவே டெல்டாவில் அமைச்சர் இல்லை என்று விமர்சனம் கூறப்பட்டு வந்தது.

தற்போது இந்த விமர்சனத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா. அதன்படி,  அமைச்சராக பதவியேற்ற அவருக்கு, தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் ராஜா மந்திரியாக முடியாது என்ற விமர்சனத்தை உடைத்தெறிந்து ராஜாவும் மந்திரியாகலாம் என்று நிரூபித்திருக்கிறார் மன்னை அமைச்சர்...