"ஆந்திரா பயணிகளின் இறப்பு உறுதிப்படுத்தப்படவில்லை" - ஆந்திர அமைச்சர் போட்சா சத்தியநாராயணா

"ஆந்திரா பயணிகளின் இறப்பு உறுதிப்படுத்தப்படவில்லை" - ஆந்திர அமைச்சர் போட்சா சத்தியநாராயணா
Published on
Updated on
2 min read

விசாகப்பட்டினத்தில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ஆந்திர மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் போட்சா சத்தியநாராயணா, ஜோகி ரமேஷ், கருமுரி நாகேஸ்வரராவ் ஆகியோர் அதிகாரிகளுடன்  ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு, அமைச்சர் போட்சா சத்தியநாராயணா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:- 

" முதல்வர் ஜெகன் மோகன் விபத்து சம்பவம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தி, அதன்படி  பேரில் தொழில்துறை அமைச்சர் அமர்நாத் தலைமையில் 3 ஐஏஎஸ் மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை முதல்வர் ஒடிசாவுக்கு அனுப்பினார். கோரமண்டல், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். ஆந்திர மாநிலத்தில் இந்த ரயில்கள் நிற்கும் நிலையங்களிலிருந்து தகவல்களைச் சேகரித்துள்ளோம்". 

" கோரமண்டல் விரைவு வண்டியில் ஆந்திராவை சேர்ந்த 482 பேர்   பேர் உள்ளனர். இதில் 309  விசாகப்பட்டினத்திலும், 31 பேர் ராஜமுந்திரியிலும், 5 பேர் ஏலூருவிலும், 137 பேர் விஜயவாடாவிலும் இறங்க வேண்டியவர்கள்.
அவர்களின் தொலைபேசி எண்களை கொண்டு  அவர்களைக் அடையாளம் கண்டுள்ளோம்.இதில் 267 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 20 பேருக்கு லேசான காயம்,  82 பேர் தங்கள் பயணத்தை ரத்து செய்தது தெரியவந்தது. 113 பேர் போனை எடுக்கவில்லை அல்லது சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டனர். இந்த 113 பேரின் விவரங்களை சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன", என்று குறிப்பிட்டார்.

மேலும், ஹவுரா செல்லும் யஸ்வந்த்பூர் விரைவு ரயிலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 89 பேர் முன்பதிவு செய்திருந்ததாகவும்,  விசாகப்பட்டினத்தில் இருந்து 33 பேர்; ராஜமுந்திரியில் இருந்து 3 பேர்; ஏலூரில் இருந்து ஒருவர்; விஜயவாடாவில் இருந்து 41 பேர்; பாபாட்லாவிலிருந்து 8 பேர் மற்றும் நெல்லூரிலிருந்து 3 பேர் இருந்தனர் என்றும், இதில் 49 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். இருவர் லேசான சுய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், 10 பேர் ரயிலில் ஏறவில்லை மற்றும், 28 பேர் தொலைபேசியை எடுக்கவில்லை அல்லது இணைப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

அதையடுத்து பேசிய அவர், , விவரங்களை சேகரிப்பதில் தாங்கள் தொடர்ந்து, கவனம் செலுத்தி வருவதாகவும், இச்சாபுரம் முதல் ஓங்கோல் வரை உள்ள மருத்துவமனைகளுக்கும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், காயமடைந்தவர்கள் யாராக இருந்தாலும்  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

 விசாகாவை அடைந்த இரண்டு காயமடைந்த பயணிகள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவருக்கு தலையிலும் மற்றொருவருக்கு முதுகுத்தண்டிலும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், சிறந்த சிகிச்சையை வழங்க ஒடிசாவிற்கு 108 ஆம்புலன்ஸ்கள் 25, தனியார் ஆம்புலன்ஸ்கள் 25 மற்றும் மொத்தம் 50 ஆம்புலன்ஸ்கள் மற்றும் இவை தவிர அவசர நடவடிக்கைகளுக்காக ஒரு ஹெலிகாப்டர் தயார் படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அதோடு, தேவைப்பட்டால் விமான சேவை பயன்படுத்தப்படும் எனவும், கடற்படையின் ஒத்துழைப்பையும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும்,  ஆந்திராவில் இருந்து பயணிகளின் இறப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும்  ஆனால், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளோம் எனவும் உறுதி கூறினார். 

அதைத்தொடர்ந்து பேசிய அவர், தேவைப்பட்டால் புவனேஸ்வர் அப்பல்லோவில் காயமடைந்தவர்களை அனுமதிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையிடம் பேசியிருப்பதாகவும் கூறினார்.  மேலும், பயணிகளின் குடும்பத்தினர் யாராவது இருப்பின், அவர்கள் தங்கள் விவரங்களை மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com