பணி நியமன முறைகேடு...ஆவின் நிர்வாக குழு கலைப்பு...!

பணி நியமன முறைகேடு...ஆவின் நிர்வாக குழு கலைப்பு...!

விருதுநகரில் முறைகேடான பணி நியமன உத்தரவு காரணமாக மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தலைவர், துணைத் தலைவர் உட்பட 17 உறுப்பினர்களை கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. அதன்பின்னர், இந்த நிர்வாக குழு கடந்த 2020 மற்றும் 2021- ம் ஆண்டுகளில் விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனத்திற்கு மேலாளர் விற்பனை, மேலாளர் பொறியியல், துணை மேலாளர்கள் விற்பனை பிரிவில் 3 பேர், பால் பதப்படுத்துதல், பண்ணை வேதியிலாளர், நுண் உயிரியலாளர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு தலா ஒரு துணை மேலாளர், 8 ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர், தனி செயலாளர் தரம், தட்டச்சர் உள்ளிட்ட 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆவினில் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் கூட்டுறவு சங்க விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு  கடந்த 2022- ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். மாவட்ட பால்வளத்துறை சார்பதிவாளர் ஆவின் பணி நியமனம் குறித்து விசாரணை நடத்தி ஜூலை 27- ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க : மகாத்மா காந்தி வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஏப்ரல் 2 முதல்...அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்!

அந்த அறிக்கையின் அடிப்படையில் பால்வளத்துறை ஆணையர் விருதுநகர் மாவட்ட ஆவினில் விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட  2 மேலாளர், 6 துணை மேலாளர்கள் உட்பட 25 பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 28- ம் தேதி மாவட்ட பொது மேலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 4- ம் தேதி 25 பேரின் பணி நியமன உத்தரவை ஆவின் பொது மேலாளர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் பால்வளத்துறை ஆணையர் சுப்பையன், விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழுவை கலைத்து மார்ச் 16- ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து  விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனத்திற்கு ஆட்சியர் ஜெயசீலன் தனி அலுவலராக பொறுப்பேற்றார்.

இதற்கிடையில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், 9 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.