செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? டெல்லியில் ஆளுநர் ஆர்.என் ரவி ஆலோசனை!

செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? டெல்லியில் ஆளுநர் ஆர்.என் ரவி ஆலோசனை!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதா? சட்ட நடைமுறைகள் என்ன ? டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. 

முறைகேடு மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள சூழலில் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வு உள்ளிட்ட துறைகள் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இருப்பினும் செந்தில் பாலாஜி 'இலாகா' இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டார். உத்தரவு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் உத்தரவு திரும்ப பெறப்பட்ட சூழலில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்திய பிறகு உத்தரவுகளை பிறப்பிக்க உள்துறை அமைச்சர் அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் இன்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இதற்கு முன்பு வேறு ஏதேனும் மாநிலங்களில் ஆளுநர் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனரா? இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்ன? மற்றும் அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கும் நீக்கம் செய்வதற்கும் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சார்ந்த அதிகாரங்கள் என்ன? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக அமலாக்கத்துறை மீது குற்றம் சுமத்தப்பட்டு வரும் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்வதற்கான சட்ட ரீதியிலான ஆலோசனைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com