"சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது" -தூர்தர்ஷன்!

"சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது" -தூர்தர்ஷன்!
Published on
Updated on
2 min read

தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளதாக தமிழக சட்டமன்ற செயலாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளில் தன்னையும் இணைத்து கொள்ளக்கோரி அதிமுக தலைமை கொறடா எஸ்.பி. வேலுமணியும் மனுத்தாக்கல்  செய்திருந்தார். 

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சட்டப்பேரவை செயலாளரின் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்தார். 

அதில், சபாநாயகரின் ஒப்புதலுடன், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்ளுக்கு பதில் அளிப்பது, அரசு 110விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள்  சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது தவிர யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலமாகவும் வெளியிடப்படுவதாகவும்  தெரிவித்துள்ளார்.

அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சட்டமன்ற நிகழ்வுகள் படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2022 ஜனவரி 6ம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாகவும், 2023 ஏப்ரல் 12ம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாகவும் கூடுதல் பதில்  மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுவதாகவும், அதில் முக்கிய தலைவர்கள், எதிர்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய கடந்த 2022ம் ஆண்டு  ஜனவரி முதல் மே மாதம் வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு 44 லட்சத்து 65ஆயிரத்து 710 ரூபாய் நிதி அளிக்கப்பட்டதாகவும், நேரடி ஒளிபரப்புக்காக ஆப்டிக் பைபர் கேபிள் அமைக்கும் நடைமுறையை தூர்தர்ஷன் துவங்கியதாகவும், இப்பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கத்துக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாகவும், தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளதாகவும் கூடுதல் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது. 

எஸ்.பி. வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஒளிப்பரப்புவதாகவும், கேள்வி நேரத்தின் போது கேட்கப்படும் கேள்விகளை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள் பதில் அளிப்பதை மட்டும் ஒளிபரப்புவதாக கூறினார். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் எஸ். பி. வேலுமணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, சட்டப்பேரவையில் சபாநாயகரின் முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்ற போதும், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்படி சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு  அதிகாரம் உள்ளதா ? என கேள்வி எழுவதாக கூறிய தலைமை நீதிபதி,  வழக்குகளின் விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com