ஈபிஎஸ் வசமான இரட்டை இலை.... தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்!!

ஈபிஎஸ் வசமான இரட்டை இலை.... தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தடைக்கோரி..:

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  அதன் மீதான தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

பொதுக்குழு கூட்டம்:

இதனைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டமானது ஜூலை 11 நடைபெற்று அதன் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

தலைமை அலுவலகத்தில்:

பொதுக்குழு கூட்டம் நடந்த அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.   ஓபிஎஸ் அங்கு சென்ற போது அவரது ஆதரவாளர்களுக்கும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பியோடினர்.

சீல் வைக்கப்பட்ட அலுவலகம்:

அதிமுக தலைமையகத்திற்குள் ஓபிஎஸ் இருந்த போது சில முக்கிய ஆவணங்களை அவரது ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றுவது போன்ற காணொலிக் காட்சிகள் அப்போது வெளியானது.  அங்கு வந்த தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.  

அவர்களிடம் அவகாசம் கேட்டு, சில நிமிடங்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.  அவர்கள் வெளியேறிய பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கையெழுத்து:

அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்அவுடன் ஈபிஎஸ் அவரது முதல் அறிவிப்பாக திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்தார்.

வழக்கு தொடர்ந்த ஓபிஎஸ்: 

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட நிலையில் இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார்.  

ஈபிஎஸ் மேல்முறையீடு:

இதனை தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்ததில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.  அதில் பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

மீண்டும் ஓபிஎஸ்:

இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 
மேல் முறையீடு செய்தனர்.  இதன் மீதான வாதங்கள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.  இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு என்ன:

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.  உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.  மேலும் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கும் , ஈரோடு இடைத்தேர்தலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

கொண்டாட்டம்:

இரட்டை இலை இனி  ஈபிஎஸ் வசம் என்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவின் ஈபிஎஸ் தரப்பினர் பட்டாசுகள் வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com