விமானத்தில் கடத்திவரப்பட்ட போதைப்பொருள்..! மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடிப்பு...!

விமானத்தில் கடத்திவரப்பட்ட போதைப்பொருள்..! மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடிப்பு...!
Published on
Updated on
1 min read

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட கிலோ கணக்கிலான போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம்,போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.  

எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அஃபாபாவில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். 

அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் உகாண்டாவில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்தபோது அந்தப் பெண் பயணி, சுற்றுலா பயணியாக வந்த தன்னை வரவேற்காமல், குற்றவாளி போல் விசாரிக்கின்றீர்கள் என ஆத்திரப்பட்டுள்ளார். இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். 

பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய உடைமைகளையும் வரவழைத்தனர். உடமைகளை சோதனை செய்ததில் போதைப்பொருட்கள், மற்றும் அபாயகரமான பொருட்கள் ஏதாவது உள்ளதா என்பதை அறிவதற்காக, சுங்கத்துறை அதிகாரிகள் மோப்ப நாய் மூலம் பரிசோதித்தனர். 

இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண் பயணியின் உடமையை சோதனை செய்ததில், அதனுள் மெத்தோ குயிலோன் என்ற போதை பொருள் ஒரு கிலோ 542 கிராம் மற்றும் ஹெராயின் போதை பொருள் 644 கிராம் இருந்தன. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த  போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். 

அந்த போதைப் பொருட்களின் மொத்த சர்வதேச மதிப்பு ரூபாய் 5.35 கோடியாகும். இதை அடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் யாருக்காக இந்த போதை பொருளை கடத்தி வந்தார், சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் யாரெல்லாம் உள்ளனர் என்று இந்த இளம் பெண்ணிடம் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com