தேர்தல் ஆணையர் தேர்வுக்குழு; தலைமை நீதிபதி நீக்கமா? மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்!

தேர்தல் ஆணையர் தேர்வுக்குழு; தலைமை நீதிபதி நீக்கமா? மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்!
Published on
Updated on
1 min read

தலைமைத் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும் வகையிலான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது. 

மாநிலங்களவை காலை தொடங்கியபோதே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமரின் வருகை குறித்து பாஜகவினர் கோஷமிடவே, அவரது வருகையால் என்ன ஆகி விடப் போகிறது எனவும், பிரதமர் ஒன்றும் கடவுள் இல்லை எனவும் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். இதனால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் 2 மணிக்கு அவை கூடியபோது, தலைமைத் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும் வகையிலான மசோதாவை மத்திய நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார்.  பிரதமர், எதிர்கட்சித்தலைவர், பிரதமர் முன்மொழியும் மத்திய அமைச்சர் ஆகிய மூவர் குழுவை உருவாக்கி  தலைமை மற்றும் மாநில தேர்தல் ஆணையர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்திட மசோதா முன்மொழிந்தது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இம்மசோதா உள்ளதாகக் கூறி காங்கிரஸ், டி.எம்.சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பொம்மைகளாக மாற்றும் அப்பட்டமான முயற்சி என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. இதன் காரணமாக நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com