சவுராஷ்டிரா மக்களை குறிவைக்கும் பிரதமர் மோடி...நேரடியாக களத்தில் குதித்து பிரச்சாரம்..!

சவுராஷ்டிரா மக்களை குறிவைக்கும் பிரதமர் மோடி...நேரடியாக களத்தில் குதித்து பிரச்சாரம்..!

குஜராத்தில் கடந்த முறை பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்திய சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மும்முனை போட்டி:

182சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தை பொறுத்தமட்டில் தற்போது மும்முனை போட்டி நிலவி வருவதால், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. 

அதிக கவனம் செலுத்தும் பாஜக:

குஜராத்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் பாஜக, இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சருக்கும் சொந்த மாநிலம் என்பதால் இருவரும் தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நேரடியாக களத்தில் இறங்கிய மோடி:

சொந்த மாநிலம் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி பல கட்டங்களாக குஜராத்துக்கு விசிட் செய்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். 

இதையும் படிக்க: நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!

சவுராஷ்டிரா மக்களை குறிவைக்கும் மோடி:

குஜராத்தை பொறுத்தமட்டில் 40க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக சவுராஷ்டிரா மக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி சவுராஷ்டிரா மக்களை குறிவைத்து 3 நாட்கள் பிரசாரத்தை துவங்கி மேற்கொண்டுள்ளார். அதன்படி இரண்டாம் நாளான இன்று, சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் வெராவல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் முழக்கங்கள் எழுப்பி அவரை வரவேற்றனர்.  அப்போது, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெரும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து, ராஜ்கோட் மாவட்டத்திற்கு சென்ற அவர் தோராஜியில் மற்றொரு பேரணியில் பங்கேற்று பேசினார். பின்னர், அம்ரேலி மற்றும் பொடாட் நகரங்களில் நடைபெறும் பேரணிகளிலும் பிரதமர் கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

மீண்டும் ஒரு சரிவை சந்திக்க கூடாது?:

முன்னதாக, குஜராத் மாநிலத்தில் கடந்த 2017 ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது படிதார் இயக்கத்தினரின் ஆதரவால் சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் கடந்த தேர்தலில் தாமரை கட்சிக்கு வெறும் 19 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால், கடந்த 2012 தேர்தலில் பாஜக 30 இடங்களில் வென்ற நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக சரிவை சந்தித்தது. அதுபோன்ற ஒரு சரிவை மீண்டும் பாஜக சந்திக்க கூடாது என்பதால் சவுராஷ்டிரா மக்களின் ஆதரவை பெறும் முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் தீவிர பிரசாரத்தை அப்பகுதியில் மேற்கொண்டு வருவதாக அரசியல் அரங்கில் வட்டமடித்து வருகிறது.