
மக்கள் ஒத்துழைப்புடன் 5 ஆண்டுகளை கடந்தும், தி.மு.க. ஆட்சி தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், "ஈடில்லா ஆட்சி.. ஈராண்டே சாட்சி" என்ற சாதனை விளக்க மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, காணொலி தொகுப்பைகளையும் வெளியிட்டார்.
தொடர்ந்து, ஒரு லட்சம் பயனாளர்களுக்கு சமூக பாதுகாப்பு பொது ஓய்வூதியங்களை முதலமைச்சர் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ள இளைஞர்களை கவுரவிக்கும் வகையில், பதக்கங்களை வழங்கினார். பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில், புதுமைப் பெண் திட்டத்திற்கான பற்று அட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிக்க : மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?
தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தி.மு.க. ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை எடுத்துரைத்தார். எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிய அவர், மக்கள் ஒத்துழைப்புடன், 5 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. ஆட்சி தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது தெரியும் என்றும், மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதவியில் இருப்பவர் சொல்வதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.