என்னிடம் தான் அனைவரும் கோரிக்கை வைப்பார்கள் ஆனால் முதலமைச்சராகிய நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்..!

மொழி இருக்கும் வரை தான் கலை இருக்கும், இசை வளர்த்தலென்பது கலை வளர்த்தலல்ல, தமிழ் வளர்த்தலும் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

என்னிடம் தான் அனைவரும் கோரிக்கை வைப்பார்கள் ஆனால் முதலமைச்சராகிய நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்..!

மியூசிக் அகாடமி ஆண்டு விழா

சென்னை மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கர்நாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன், வயலின் இசைக் கலைஞர்கள் லால்குடி கிருஷ்ணன், விஜயலட்சுமி, மிருதங்க கலைஞர் திருவாரூர் பக்தவச்சலம், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராசன் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து உரையாற்றினார்.

முதலமைச்சர் உரை

மியூசிக் அகாடமியின் 96ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1975 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடந்த ஆண்டு விழாவில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் 96ஆம் ஆண்டு விழாவில் நான் பங்குப் பெறுவதில் பெருமைப்படுகிறேன்.

1927ஆம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய இசையை வளர்த்தெடுப்பதற்காக இப்படி ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் உருவாக்குவது எளிது, தொடர்ந்து நடத்துவது சிரமம் ஆனால் இந்த அமைப்பை 96 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்திருக்க கூடிய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன். இன்னும் நான்கு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா நடைபெற போகிறது, அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்றும், முரளி அவர்கள் அழைப்பார் என்றும் நம்புகிறேன். 

இசை ரசிகனாக வந்திருக்கிறேன்

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் இருக்க கூடிய இசைக்கலை மன்றங்களில் மிக முக்கியமானதாக இருக்க கூடியது இந்த மியூசிக் அகாடமி. இசைக்கு மாபெரும் வரலாறு உண்டு, அத்தகைய வரலாற்றில் மியூசிக் அகடெமிக்கு தனி இடம் உண்டு. இந்த விழாவிற்கு முதலமைச்சர் என்ற அடிப்படையில் நான் வரவில்லை, இசை ஆர்வலன், இசை ரசிகன் என்ற அடிப்படையில் தான் நான் வந்திருக்கிறேன் ஆனால் அதற்காக நான் இசை கலைஞரோ,  இசை அறிஞரோ அல்ல.

இசைஞானம் கொண்ட கலைஞர்

என்னுடைய தாத்தா முத்துவேல் அவர்கள் ஒரு இசை வேந்தர், பாடல்கள் எழுதுவது மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் சிறந்தவராக இருந்திருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் இசை கற்க சென்றார் ஆனால் தொடரவில்லை. இசைஞானம் அதிகம் கொண்டவராக முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தார் ஆனால் எனக்கு பேச்சு கச்சேரி தெரியும் ஆனால் பாட்டு கச்சேரி தெரியாது. ஒரு காலத்தில் மேடை பேச்சுகளையும் கச்சேரி என்று தான் சொல்வார்கள், வயதில் மூத்தவர்களுக்கு அது தெரியும்.

இந்து குழுமத்திற்கு நன்றி

நான் தினந்தோறும் இந்து நாளிதழ் நிறுவனத்தை நினைத்து கொண்டே இருப்பேன், அதை முரளி அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும் மேடையாக இதை நான் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். எனக்கு அன்பளிப்பாக தினமும் வழங்க கூடிய புத்தகங்களில் பெரும்பாலும் தரப்படும் புத்தகம் எதுவென்றால், இந்து குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட பேரிரறிஞர் அண்ணாவை பற்றிய "மாபெரும் தமிழ் கனவு" மற்றும் தலைவர் கலைஞர் பற்றிய "தெற்கிலிருந்து ஒரு சூரியன்" புத்தகமும் தான், அதனால் தான் இந்த நிறுவனத்தை நான் தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு நன்றி தெரிவிக்க கூடிய மேடையாகவும் இதை நான் பயன்படுத்தி கொள்கிறேன், தனியாக இதற்கு ஒரு விழா நடத்த வேண்டிய அவசியம் இல்லை, அதற்கான அவசியத்தை முரளி எனக்கு கொடுக்கவில்லை.

சென்னையின் வேடந்தாங்கல்

மரியாதைக்குரிய முரளி அவர்ளுக்கு இந்து நாளிதழின் இயக்குநர் என்பது ஒரு அடையாளம் என்றால், மியூசிக் அகாடமி இன்னொரு அடையாளமாக உள்ளது. ஆண்டு தோறும் மார்கழி மாதம் உலகம் முழுவதும் இருக்க கூடிய இசை பறவைகளை சென்னை நோக்கி வரவைக்கும் வேடந்தாங்களாக மியூசிக் அகாடெமி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

திறமைசாலிகளை உருவாக்க வேண்டும்

இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல். அந்த வகையில் மக்கள் மனதையும், இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை இசைக்கலை மன்றங்கள் செய்து வருவது மிகப்பெரிய தொண்டு.
இந்த மாபெரும் விழாவில் விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் இத்துறைக்கு தொண்டாற்றி, உங்களை போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆதி மனிதனின் முதல் மொழி

இயல், இசை, நாடகமென்று முத்தமிழை பிரிப்பார்கள், இந்த முத்தமிழில் முதலில் பிறந்தது நாடகம் தான் என்று கலைஞர் அவர்கள் சொல்வார்கள். ஆதி மனிதனின் முதல் மொழி செய்கையே, அதனால் தான் முதலில் பிறந்தது நாடகம். அந்த வகையில், நாடகம், இசை, இயல் என்பதே சரியான வரிசையென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள்.

முதலமைச்சரின் கோரிக்கை

இசை என்பது காதுகளுக்கு போர்த்த கூடிய கௌரவ பொன்னாடைகளென்று கவிஞர் மு.மேத்தா குற்றிப்பிட்டார். அத்தகைய கௌரவ பொன்னாடை போர்த்தும் அரங்கம் தான் இந்த  மியூசிக் அகாடெமி.
பொதுவாக முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள் ஆனால் நான் இங்கு இசை கலைஞர்களுக்கு கோரிக்கை வைக்கிறது காலத்தின் தேவையாகி இருக்கிறது.

இந்து தமிழ் தேசிய நாளிதழிலில் மியூசிக் அகாடமியின் தலைவைர் முரளி பேட்டியளித்திருந்தார், அதில் தனது கொள்கையை வெளிப்படையாக சொல்லியிருந்தார். எங்களது விழாவின் மூலமாக "வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம்" என்று சொல்லி இருந்தார். இந்த கருத்து தான் இப்போது நாட்டுக்கு தேவையான கொள்கை, இந்த கொள்கை அரசியல் கட்சிக்கானது மட்டும் தான் என்று நினைத்துவிட கூடாது, இது ஒவ்வொரு தனி மனிதரின் கொள்கையாக மாற வேண்டும்.

தமிழ் பாடல்கள் ஒலிக்க வேண்டும்

அதேபோல் ம்யூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்கள் தமிழ் பாடல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன, அந்த பாடல்களும் இந்த இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும். பக்தி இசையாகயிருந்தாலும், மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாகயிருந்தாலும், ராக் இசையாகயிருந்தாலும், தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள் 

டென்ஷன் இல்லாத நிகழ்ச்சி

மொழி இருக்கும் வரை தான் கலை இருக்கும், இசை வளர்த்தலென்பது கலை வளர்த்தலல்ல, தமிழ் வளர்த்தலும் தான் என்பதை அனைத்து கலைஞர்களும், கலை அமைப்புகளும் மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கிறேன்.

 மேலும் படிக்க: இளையராஜாவின் இசை..! நிறைவடையும் காசி தமிழ்ச் சங்கமம்..!

நான் முதலமைச்சராக பொறுப்பேற்று எந்தவித பிரச்சனைகள் இல்லாமல், பரபரப்பு இல்லாமல், அதவாது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது இந்த நிகழ்ச்சியாக தான் இருக்கும். இந்த நல்ல வாய்ப்பை  எனக்கு உருவாக்கி தந்த மியூசிக் அகாடமி நிர்வாகிகளுக்கும் குறிப்பாக முரளி அவர்களுக்கு நன்றி, என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.

- அறிவுமதி அன்பரசன்