மக்கள் பணத்தை கீரை போல கடைந்துண்ணும் அதிகாரிகள்; காரித் துப்பி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்!

மக்கள் பணத்தை கீரை போல கடைந்துண்ணும் அதிகாரிகள்; காரித் துப்பி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்!

திருவண்ணாமலையில் வேளாண் அதிகாரியிடம் மினி கிட் கேட்டு மனு அளித்த விவசாயியை தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்ட வேளாண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மண் சட்டியில் புளிச்சக்கீரை சாதம் செய்து விவசாயிகளுக்கு உருண்டை சோறு பிடித்து பகிர்ந்து அளித்து உண்டனர். கை கழுவி வாயிலிருந்து தண்ணீர் கொப்பளித்து, காரி துப்பி அதிகாரிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் விவசாயிகள் தங்கள் கைகளை தண்ணீரால் கழுவி வேளாண் அதிகாரிகள் தங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைகழுவி விடுகின்றனர் என்பதை காட்டும் விதமாக தங்கள் போராட்டத்தை சித்தரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் கூறுகையில், துரிஞ்சாபுரம் வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கு மேலாளர் ரகுபதியிடம் மினி கிட் கேட்டு விவசாயி மணிகண்டன் என்பவர் அணுகியபோது கிடங்கு மேலாளர் விவசாயி மணிகண்டனை தரக்குறைவாக பேசி தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். இது சம்பந்தமாக விவசாய குறைதீர்வு கூட்டம் உள்ளிட்ட பல கூட்டங்களில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்தாததால் ஜேடிஏ விடம் மனு கொடுத்தும் நேரில் பேசியும் எந்த பதிலும் இல்லை. மேலும், விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட  சேத்துப்பட்டு ADA மீதான விசாரணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் செங்கம் ஏடிஏ, விவசாயிகள் தங்கள் குறைகளை பேச பதிவு அடிப்படையில் பெயர் அழைக்கவில்லை. தொடர்ந்து தென்னங்கன்று வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதை விசாரணை செய்யவில்லை எனவும் புகார் கூறினார்.

தொடர்ந்து, கலசப்பாக்கம் ஏடிஏ மீதான புகார் மனுவிற்கு இதுவரை பதில் இல்லை என குறிப்பிட்ட அவர், மொத்தத்தில் அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய (ஜேடிஏ) இணை இயக்குனர் செயல்பாடு இல்லாமல் ஏடிஏ க்கள் மீதான விசாரணை செய்யாமல் உள்ளதாக கூறினார். மேலும், அவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்தார்.

இதையும் படிக்க:பிரீமியம் தொகைக்கு போலி ரசீது; ரூ. 2.5 கோடி மோசடி செய்த எல்.ஐ.சி ஏஜெண்ட் கைது!