பட்டாசு குடோன் விபத்து; 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

பட்டாசு குடோன் விபத்து; 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை 29ம் தேதி   பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
 இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பட்டாசு குடோன் அருகில் செயல்பட்ட ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  

இந்த விபத்து தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இதுசம்பந்தமாக ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:NLC விவகாரம்; மக்களை சந்திக்க கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களுக்கு தடை!