ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் 'மிதவை உணவக கப்பல்' !

ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் 'மிதவை உணவக கப்பல்' !

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ளப்பட்டு 'மிதவை உணவக கப்பல்' பயன்பாடு ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளை வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகு இல்லத்தில்ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) அமைக்கப்படுகிறது.

இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது.

இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இரண்டு அடுக்கு உணவக பயணக் கப்பல் நீளம் 125 அடியும் அகலம் 25 அடியும் கொண்டதாகும். உணவக கப்பல் அமைக்கும் பணியினை இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும் படகுகுழாமில் அமைச்சர் படகில் பயணித்து ஆய்வு பணியினை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து பேசிய அமைச்சர் ராமசந்திரன், மிதவை கப்பல் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்தேன், தரமாகவும், பாதுகாப்பான முறையில் பணிகள் நடைபெறுகிறது, வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்தினை தமிழகத்தில் கோயம்புத்தூர், ஊட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். சமையற்கலைஞர் செப். தாமுவை வைத்து அனைத்து சமையற்கலைஞர்களை வரவழைத்து 7 நாட்கள் சென்னை மற்றும் மதுரையில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தீயணைப்புத் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு!