ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடை வேதனை அளிக்கிறது - முன்னாள் அமைச்சர் விஜயபஸ்கர்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடை வேதனை அளிக்கிறது - முன்னாள் அமைச்சர் விஜயபஸ்கர்

தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியில் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே மற்றும் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைக்கு உட்பட்டதாக இல்லை எனவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பகுதியில் பேரிகாட் தடுப்புகள், மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் இல்லாத நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இரண்டாவது முறையாக தடை விதித்தனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, இன்று தச்சங்குறிச்சி கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர் கிராம மக்களை சந்தித்து உரையாடினார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவிருந்த வாடிவாசல் மற்றும் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் செய்தியாளர் சந்தித்து, இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருப்பது பெரும் வேதனையும் மன வருத்தத்தையும் அளிக்கின்றது. அதிமுக ஆட்சிக்காலத்தில் இதே இடத்தில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு இன்று தடை  விதிக்கப்பட்டுள்ளது. 

இன்று இந்த பகுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடினேன். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இன்று சட்டத்துறை அமைச்சரின் பேட்டி மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது எனவும், மேலும் ஜல்லிக்கட்டு வழக்கில் மாவட்டம் சார்பில் தான் ஏற்கனவே ஆஜராகி உள்ளேன். ஜல்லிக்கட்டு சட்ட திட்ட விதிகள் தனக்கும் தெரியும், தானும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவன் தான்.. அரசியலுக்கு அப்பாற்பட்டு மாவட்டத்தின் உணர்வோடு, ஜல்லிக்கட்டு உணர்வோடு அனுமதி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். 

இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி தரப்படும் என கூறியிருக்கிறார்கள். அப்படி மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டால் தன்னுடைய தலைமையில் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முகூர்த்தக்கால் நடப்பட்ட செய்தி மனமகிழ்ச்சி அளிக்கிறது. அதே போன்று இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியிலும் நடைபெற்று இருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை இது பெரும் மன வருத்தம் எனவும் பேசினார். மேலும் இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி, இது போன்ற ஜல்லிக்கட்டுகளுக்கு சிறப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் கூறினார். 

இதையும் படிக்க : விஷுவல் பிரசண்ட்டர் மற்றும் வயர்லெஸ் டேப்லட் தொழில்நுட்பம்...! தொடங்கி வைத்த அமைச்சர்..!