"ஆளுநரின் அரசியல் சண்டித்தனம்... தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம்" கி.வீரமணி காட்டம்!

"ஆளுநரின் அரசியல் சண்டித்தனம்... தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம்" கி.வீரமணி காட்டம்!
Published on
Updated on
1 min read

ஆளுநரின் அரசியல் சண்டித்தனம் - தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் மற்றும் திமுக ஆட்சியாளர்கள் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின்னர் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டு பின்னர் அதனை 5 மணி நேரத்தில் திரும்பவும் பெற்றுக்கொண்டார். இதனால் முதலமைச்சர் ஆளுநர் இடையேயான மோதல் போக்கு மேலும் வலுவடைந்துள்ளது. இதில் திமுக ஊழல் செய்பவர்களுக்கு துணைபோகவதாகவும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் நபர் போல செயல்படுவதாகவும் இரு தரப்பினரும் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திராவிடர் கழக நாளேடான விடுதலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டு ஆளுநரை ஆளுநரான பச்சை ஆர்.எஸ்.எஸ் என விமர்சித்துள்ள அவர்,  சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் சுமார் 13 மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், மாதக் கணக்கில் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் செய்தவர்களுக்கு (மேனாள் அமைச்சர்கள்) எதிராக வழக்குப் போட அனுமதி வழங்குவதையும் தவிர்த்து வருவதோடு, கோப்பே வரவில்லை என்று பொய் சொல்லி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தை மணம் செய்துகொண்டதை பெருமையோடு பதிவு செய்த ‘விசித்திர மனிதர்' என ஆளுநரை  விமர்சித்துள்ள கி.வீரமணி அவரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்ப அழைக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல திட்டங்களைத் தீட்டவே இப்படி ஓர் அரசியல் அடாவடித்தன அலங்கோலம் அன்றாடம் அரங்கேறி வருகிறது என முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டியுள்ள வீரமணி ஆளுநரின் அரசியல் சண்டித்தனம் - தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காவியை - காவிக்காரர்களை தமிழ் மண் - திராவிட மண் - பெரியார் மண் - சமூகநீதி சமத்துவ மண் அனுமதிக்க மறுப்பதல்லாமல், தென்னாட்டிலிருந்தே விரட்டுவதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறதே என்ற ஆத்திரத்தால் - தமிழ் மக்களுக்கு விடப்படும் அறைகூவல் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com