நிலக்கரி சுரங்கத்தை அரசு அனுமதிக்காது  -உதயநிதி 

நிலக்கரி சுரங்கத்தை அரசு அனுமதிக்காது  -உதயநிதி 

நிலக்கரி சுரங்கத்தை அரசு அனுமதிக்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

திருவாரூரில்  ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அரசு அனுமதிக்காது என தெரிவித்துள்ளார். மேலும் புதிய நிலக்கரி சுரங்கம் பற்றி நாளை சட்டப்பேரவையில் கண்டிப்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. குறிச்சிக்கோட்டை, பரமன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் தஞ்சையின் ஒரத்தநாடு வட்டத்தில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. பாதுகாப்பான வோளாண் மண்டல சட்டம் தஞ்சையில் அமலில் இருக்கும் போதே இந்த அறிவிப்பு வெளியானதால் விவசாயிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் "புதிய சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி புதிய நிலக்கரி சுரங்கம் பற்றி நாளை சட்டப்பேரவையில் கண்டிப்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.