”பாஜக முதன் முதலில் மத்தியில் ஆட்சி அமைக்க உதவியதே அதிமுகதான்” - எடப்பாடி விமர்சனம்!

”பாஜக முதன் முதலில் மத்தியில் ஆட்சி அமைக்க உதவியதே அதிமுகதான்” - எடப்பாடி விமர்சனம்!
Published on
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்து, அதிமுக தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து  மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அதிமுக மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக கூறினார். பாஜக தேசிய தலைவர்களே ஜெயலலிதாவை, அவரது இல்லம் தேடிச் சென்று பேசியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார் என குற்றம்சாட்டிய அவர், திட்டமிட்டு அவதூறு கருத்தை பொதுவெளியில் அண்ணாமலை கூறியுள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக முதன் முதலில் மத்தியில் ஆட்சி அமைக்க உதவியதே அதிமுகதான் என மேற்கோள் காட்டினார். அரசியல் முதிர்ச்சியின்றி அண்ணாமலை பேசியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். 

முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது, அண்ணாமலை சர்ச்சை பேச்சு குறித்து பா.ஜ.க தேசிய தலைமை உரிய நடவடிக்கை எடுக்காவிடில் பா.ஜ.க உடனான கூட்டணி தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com