தூய்மைப் பணியாளர் பணி... தமிழ் தெரிந்தால் மட்டுமே வேலை?!!

தூய்மைப் பணியாளர் பணி... தமிழ் தெரிந்தால் மட்டுமே வேலை?!!
Published on
Updated on
1 min read

அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மைப் பணிகளுக்கு நியமனம் செய்யும் போது, தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிப்பதை கட்டாயமாக்குவது குறித்து  பரிசீலிக்க வேண்டும் என டெண்டர் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டெண்டர்:

தமிழ்நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, இதுசம்பந்தமாக டெண்டர் கோரப்பட்டது.

நிபந்தனைகள்:

இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள்,

  • 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண்டும்.  

  • கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்.

  • 5 ஆயிரம் பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும்.

வழக்கும் தள்ளுபடியும்:

இதனால் டெண்டரை எதிர்த்து குவாலிட்டி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  ஆனால் டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேல் முறையீட்டு வழக்கு:

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.  அதாவது,

  • 10 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும்.

  • ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும்.

  • 3 ஆயிரம் ஊழியர்க்ளை கொண்டிருக்க வேண்டும். என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய டெண்டர்:

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டெண்டர் நிபந்தனைகள், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டப்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை எதிர்க்க முடியாது எனவும் தெரிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது அதை திருத்தியது ஏன் என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறி, டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்து, புதிய டெண்டர் கோர உத்தரவிட்டனர்.

தமிழ் கட்டாயம்:

மேலும் கிராமப்புற மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதி,  தகவல் தொடர்புக்கு ஏதுவாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணியாளர் பணிக்கும் தமிழ் தெரிந்தவரையே கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பரிசீலிக்க டெண்டர் குழுவுக்கு உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com