ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்.... தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனு...!!!

ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்.... தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனு...!!!

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடியதாக பதிவான வழக்கில் அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட மூவரின் முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்:

அதிமுகவின் மறைந்த பொது செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

திமுகவின் புகார்:

அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த அவதூறான கருத்துக்களை பரப்புவதற்காக உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல்  எல்.இ.டி. திரை வைத்து ஒளிபரப்பியதாகவும் திமுக வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 21 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முன் ஜாமீன்:

இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தெற்கு மண்டல செயலாளர் எம்.என்.சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் எஸ். ஆர்.அன்பு ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தவறான புகார்:

அந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றியை பொறுக்காமல் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சாலையின் சந்திப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறுவது தவறான குற்றச்சாட்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு:

புகார்தாரரான தமிழ்செல்வன் தரப்பில், உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாமல் செய்யாமலும் எல்.இ.டி. திரைகளை வைத்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளதால் முன் ஜாமீன்  வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம்:

காவல்துறை தரப்பில் 21 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் தலைமறைவாக உள்ளதால், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூறி, பொதுக்கூட்டம் நடந்த அன்று காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் குறுந்தகடாக தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரவு:

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, குறுந்தகட்டை ஆய்வு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெருப்பை கக்கும் கலை நிகழ்ச்சி நடத்தியது, மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்தது ஆகியவை நிரூபணம் ஆகியுள்ளதாக கூறி, இவை உயர்நீதிமன்றம் விதித்த  நிபந்தனைகளுக்கு முரணானது என்பதால், மூவரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:    சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...!!