கீழடி அருங்காட்சியம் : 100 நாட்களில் 2.25 லட்சம் பேர் வருகை!

கீழடி அருங்காட்சியம் : 100 நாட்களில் 2.25 லட்சம் பேர் வருகை!
Published on
Updated on
1 min read

சிவகங்கை: 100 நாட்களில் கீழடி அருங்காட்சியகத்தை 2.25 லட்சம் பார்வையாளர்கள் நேரில்  பார்வையிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மறுநாள் முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மார்ச் 7ம் தேதி முதல் பார்வையாளர்கள் வருகை பதிவு செய்யப்பட்டது. மார்ச் மாதம் முழுவதும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.

மார்ச் மாதத்தில் 25 நாட்களில் மட்டும் 65 ஆயிரத்து 432 பேர் நேரில் கண்டு ரசித்துள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி முதல் பெரியவர்களுக்கு 15 ரூபாயும் சிறியவர்களுக்கு 10 ரூபாயும் மாணவர்களுக்கு ஐந்து ரூபாயும், வெளிநாட்டினர் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 30 ரூபாயும், வீடியோ கேமரா பயன்படுத்த 100 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 96 ஆயிரம் பேர் நுழைவு கட்டணம் செலுத்தி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்துள்ளனர்.

மே மாதம் கோடை விடுமுறை என்றாலும் வெயிலின் தாக்கம் காரணமாக பார்வையாளர்கள் வருகை கணிசமாக குறைந்தது. மே மாதத்தில் மட்டும் சுமார் 62 ஆயிரம் பேர் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்துள்ளனர். மார்ச் 5ம் தேதி முதல் ஜுன் 18 வரை 102 நாட்களில் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 432 பேர் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்துள்ளனர்.

அருங்காட்சியகத்தில் உள்ள 10 கட்டிட தொகுதிகளில் ஆறு கட்டிடங்களில் 13 ஆயிரத்து 608 பொருட்கள் இரண்டிரண்டு தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலரும் அருங்காட்சியகத்தை காண வந்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு கட்டிட தொகுதியிலும் பொருட்கள் காட்சிப்படுத்தியதற்கு ஏற்ப மெகா சைஸ் டிவியில் அனிமேஷன் காட்சிகள் ஒளிபரப்படுகின்றன. ஒவ்வொரு தளங்களிலும் புடைப்பு சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் 54 பேர் அமரும் வகையில் மினி ஏசி தியேட்டரும் உள்ளது. அதில் கீழடி அருங்காட்சியகம் பற்றிய காட்சித்தொகுப்பு ஒளிபரப்பப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. வரும் காலங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com