தி.நகரில் புதிய ஆகாய நடைபாதை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்..!

தி.நகரில் புதிய ஆகாய நடைபாதை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்..!

தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். 

சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஆகாய மார்க்கமாக மாம்பலம் ரயில் நிலையம் வரை 28 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில்  570 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய  ஆகாய நடைமேடையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி மயிலை வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிதாய் திறக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையில் நகரும் படிக்கட்டுகள், மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரங்கநாதன் தெருவிலும், தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் உஸ்மான் சாலை என இரண்டு இடத்திலும் தலா ஒரு மின் தூக்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் மானிட்டர் செய்யும் கண்காணிப்பு கேமராவும் வைக்கப்பட்டுள்ளது. கேமரா பதிவுகளை கண்காணிக்க  தியாகராய நகர் காவல் நிலையத்தில் ஏற்பாடும் செயப்பட்டுள்ளது. ஆகாய நடைமேடை முழுவதும்  வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. முக்கியமாக மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலி செல்லும் வகையிலும் வசதிகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் புதிய கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஆகாய நடைபாதையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரங்கநாதன் தெருவரை பார்வையிட்டபடி நடந்து சென்றார். மேலும் ரங்கநாதன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிய அவர் இருபுறமும் கூடியிருந்த பொது மக்களை கையசைத்தும், கை கொடுத்தும் உற்சாகப்படுத்தினார் மேலும்  அங்கு கூட இருந்த பொதுமக்கள் பலரும் முதல்வருடன் தனது செல்போன்களில் படம் எடுத்துக் கொண்டனர் அதோடு முதல்வரும் பொது மக்களின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்தது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது. முதலமைச்சரின் எதிர்பாராத நடைப்பயணத்தால் ரங்கநாதன் தெருவே களைகட்டியது. பின்னர் அரைமணிநேர நடை பயணத்திற்குப் பிறகு தனது காரில் புறப்பட்டு சென்றார்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!