"தமிழ்நாட்டுப் பெண்கள் துணிச்சல் மிக்கவர்கள்" அமைச்சர் மனோ தங்கராஜ் புகழாரம்!

"தமிழ்நாட்டுப் பெண்கள் துணிச்சல் மிக்கவர்கள்" அமைச்சர் மனோ தங்கராஜ் புகழாரம்!

பாலின சமத்துவத்தை பாதுகாப்பதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுப் பெண்கள் துணிச்சல்மிக்கவர்களாக திகழ்கிறார்கள் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சக்தி மசாலாவின் 6 ஆம் ஆண்டு "சுயசக்தி விருதுகள் 2023"ன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், வரலட்சுமி சரத்குமார் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுகாசினி மணிரத்னம், பெண்களுக்காக பெண்களைப் பற்றி யோசிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். கடந்த காலத்தில் பெரியார்,பாரதியார், பாலச்சந்தர் போன்றோர் பெண்களைப் பற்றி சிந்தித்தனர். இப்பொழுது இது போன்ற விருதுகள் வழங்குவதின் மூலம் பெண்களுக்காக இன்னும் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்று என்ன தோன்றுகிறது. பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதில் தமிழ்நாடு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.

\அடுத்ததாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "இது போன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. ஒருவரை வாழ்த்துவது அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யும். நாகரிகங்கள் தோன்றிய காலத்தில் பெண்களே குடும்பத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர். காலப்போக்கில் பெண்கள் பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானார்கள்.இதில் குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்பட்டார்கள்" என தெரிவித்தார்.

மேலும் மூன்றாம் பாலினத்தவர்களை சமுதாயம் நடத்தும் விதம் மிகவும் சங்கடமாக இருப்பதாக கூறி வருத்தப்பட்ட அவர் இது வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு அழகல்ல எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, பாலின சமத்துவத்தை பாதுகாப்பதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுப் பெண்கள் துணிச்சல்மிக்கவர்களாக திகழ்கிறார்கள் எனவும் கூறினார்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்