பழனி கோயிலில் மொபைல் போனுக்கு தடை!

பழனி கோயிலில் மொபைல் போனுக்கு தடை!

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குள் மொபைல் போன்கள் மற்றும் கேமரா பொருத்திய கருவிகள் கொண்டு வர விதிக்கபட்ட தடை அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தபடும் என்றும், தடையை மீறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை  சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி  கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோவிலின் இணை ஆணையரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், 2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குள் மொபைல் போன்கள் மற்றும் கேமரா பொருத்திய கருவிகள் கொண்டு வர விதிக்கபட்ட தடை அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தபடும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பழனி கோவிலின் மலை அடிவாரத்தில், மொபைல் போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கை துவங்கபட்டுள்ளதாகவும், மொபைல் போன்களை பாதுகாப்பதற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக முடிவு செய்யபட்டுள்ளதாகவும், தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் சுய உதவி குழுக்கள் மூலம் மொபைல் போன்கள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

விஞ்ச், ரோப் கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் அருகே என 3 இடங்களில் மொபைல் போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கபட உள்ளதாகவும், மலைக் கோவில் அருகே அமைந்துள்ள தண்ணீர் பந்தல் மண்டபம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தவுடன், அது மீட்டெடுக்கப்பட்டால், அந்த மண்டபத்தின் ஒரு பகுதியும் மொபைல் போன்கள் சேகரிப்பு மையமாக பயன்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கபட்டுள்ளது.

கோவிலுக்குள் மொபைல் போன்கள் கொண்டு செல்லகூடாது என இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பக்தர்கள் தங்கும் இடங்களில் விளம்பரபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும், மேலும், பக்தர்களும் பரிசோதிக்கபடுவார்கள் என்றும், இதையும் மீறி  பக்தர்கள் எவரேனும் கேமரா போன்ற பொருட்களை கொண்டு வந்து புகைபடம் எடுத்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த நடைமுறைகளை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறித்தி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர். 

இதையும் படிக்க:"சட்டப் புத்தகங்களையே கொளுத்துகின்ற நிலை ஏற்பட்டு விடும்" வழக்குரைஞர் கூட்டமைப்பு!