"திமுக கூட்டணி அதிமுகவிற்கு வந்துவிடுமோ என ஸ்டாலின் அஞ்சுகிறார்" கே.பி. முனுசாமி!!

இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கே.பி. முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வை மதிக்கும் வகையில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தோம். நேரம் வரும்போது அதிமுக பாஜக கூட்டணி அமையும் என ஒரு சிலர் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் அதிமுக நாடகமாடுகிறது என்று தெரிவித்துள்ளனர். இது அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் வெளிப்பாடு என்று நாங்கள் கூறுவோம்" எனக் கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் இருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நேரத்தில் பாஜக செய்யத் தவறியதை மக்களிடையே நாங்கள் சுட்டிக் காட்டுவோம் என்றும் பாஜக கூட்டணி குறித்து பொதுச்செயலாளரின் உணர்வையே நாங்கள் வெளிப்படுத்தி உள்ளோம் எனவும், அவர் பேச வேண்டிய நேரம் வரும்போது தன்னுடைய கருத்தை தெரிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுக்கு வந்து விடுமோ என்று ஸ்டாலின் அஞ்சுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க || திருவள்ளூர் முதல் திருவள்ளுவர் சிலை வரை... ஒரு கோடி பனை விதை திட்டம்!!