தேசிய கீதமும் தேசிய பாடலும் தனித்துவம் வாய்ந்தவை...!!! மத்திய அரசு விளக்கம்!!

தேசிய கீதமும் தேசிய பாடலும் தனித்துவம் வாய்ந்தவை...!!! மத்திய அரசு விளக்கம்!!

தேசிய கீதம், தேசிய பாடல் ஆகியவற்றிற்கு வழிகாட்டுதல்கள் தொடர்பான விதிகள் இல்லாததால், அவை நாகரீகமற்ற முறையில் பாடப்படுவதாகவும், திரைப்பட காட்சிகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் உயர்நீதிமன்றத்தில் மனு.
 
வேண்டும் இரண்டிற்கும் ஒரே மரியாதை:

தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' ஆகியவற்றிற்கு ஒரே வகையிலான மரியாதை அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

மேலும் அந்த மனுவில் ஒவ்வொரு வேலை நாளிலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' இசைக்கப்படுவதையும் பாடுவதையும் உறுதி செய்ய மத்திய அரசுஉத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்:

மத்திய அரசு வழக்கறிஞர் மணீஷ் மோகன், ”தேசிய கீதத்திற்கு இணையாக வந்தே மாதரம் பாடுவது அல்லது இசைப்பது தொடர்பாக எந்தவிதமான தடைகளும் இல்லை.  அது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவுகளோ இல்லை” என்றும் வாதிட்டார்.  

மேலும், “இந்தியர்களின் உணர்வுகளிலும், ஆன்மாவிலும் இந்தப் பாடல் தனி இடத்தைப் பிடித்துள்ளது.  இதுமட்டுமின்றி, பாடல்களைப் பொறுத்தவரை உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன.” எனவும் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் பதில்:

மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இரண்டும் ஒன்றுதான் எனவும் குடிமக்கள் இரண்டையும் சமமாக மதிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், “ஜன கண மன'வில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் மாநிலத்தை மனதில் வைத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  இருப்பினும், 'வந்தே மாதரத்தில்' வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் நாட்டின் தன்மை மற்றும் பாணியை பிரதிபலிக்கின்றன.  எனவே இவை இரண்டும் சமமான மரியாதைக்கு தகுதியானவை.” எனக் கூறியுள்ளது.

தொடர்ந்து, “அந்த மனுவில், வந்தே மாதரத்தை நாடகமாக்கக் கூடாது என்றும், எந்த நிகழ்ச்சியிலும் அதைச் சேர்க்கக் கூடாது என்றும், எப்போது பாடினாலும், இசைக்கப்பட்டாலும், கலந்து கொள்ளும் அனைவரும் உரிய மரியாதையைக் காட்டுவது என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.” எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்:

இந்த மனு மீதான விசாரணை தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்விடம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அமர்வு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

மனுதாரரின் நீதிமன்ற வாதம்:

அதற்கு முன்னதாக விசாரணையின் போது, ​​மனுதாரர் நீதிமன்றத்தில் வாதிடுகையில், வந்தே மாதரம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகள் இல்லாததால், தேசிய பாடலானது நாகரீகமற்ற முறையில் பாடப்படுகிறது மற்றும் திரைப்பட காட்சிகளில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com