மக்கள் நலனில் அக்கறையற்ற தேசிய கட்சிகள்... மூன்றாவது நாளாக முடங்கிய அவை!!!

மக்கள் நலனில் அக்கறையற்ற தேசிய கட்சிகள்... மூன்றாவது நாளாக முடங்கிய அவை!!!

ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி ஆளும் கட்சி உறுப்பினர்களும், அதானி குழும முறைகேட்டை கண்டித்து எதிர்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்றாவது நாளாக முடங்கின.

அமளியில் கட்சிகள்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.  கூட்டத் தொடர் தொடங்கிய நாள்முதல் பாஜக. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆளுங்கட்சி:

இதன் மூன்றாம் நாளில் மக்களவை கூடியதும், இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக லண்டன் பல்கலைக் கழகத்தில் ராகுல் காந்தி விமர்சித்ததை மேற்கோள்காட்டி பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதற்காக அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தி முழக்கம் எழுப்பிய பாஜக உறுப்பினர்களுடன், எதிர்கட்சி உறுப்பினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அமளி ஏற்பட்டதை அடுத்து மக்களவை கூடிய 5-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர், அவை கூடியபோதும் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகளும்: 

இதேபோல், அதானி குழு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.  இதனால் பிற்பகல் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர், மீண்டும் அவை கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர் அமளி:

இந்தியாவின் ஜனநாயகம் குறித்து வெளிநாட்டில் அவதூறாக பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் ஒருபுறம் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மறுபுறம், அதானி குழு விவகாரம், பணவீக்கம், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்றாவது நாளாக முடங்கின. 

இதையும் படிக்க:   தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்கிறதா மத்திய அரசு...!!!