"ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராது என்றும் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களை தள்ளிப் போட பிரதமர் மோடி பார்க்கும் வேலை தான் இது" என்றும் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
” புதுச்சேரி ஆளும் என்.ஆர் காங்கிரஸ் பாஜக அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கி ஆட்சியில் அமர்ந்திருப்பதாகவும் அவர்கள் இதுவரை எந்த பணியிடங்களையும் நிரப்ப வில்லை எனவும் அதற்காக ஆசிரியர் நியமனத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த நினைக்கிறார்கள் இதன் மூலம் குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என நினைக்கிறார்கள்.
ஏற்கனவே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் அவலமான ஆட்சி புதுச்சேரியில் நடைபெறுவதாக விமர்சித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வரவில்லை எனவும் தற்போது மோடிக்கும் அமிஷ்தாவுக்கும் பயந்து தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவுக்கு அடிபணிந்து முதலமைச்சர் ரங்சாமி புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், குறிப்பாக சிபிஎஸ்சி பாடத்திட்டம் வரும்போது ஆசிரியர்கள் அதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; ஆனால் ஆசிரியர்களுக்கு எந்தவித பயிற்சியும் கொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் எப்படி சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியுமெனவும் கேள்வி எழுப்பினார்.
அள்ளித் தெளித்த கோலம் போல அவசர அவசரமாக மத்திய அரசுக்கு பயந்து புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தி இருக்கிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி என தனி பாடத்திட்டத்தை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவர் உறுதி அளித்தார்.
புதுச்சேரியில் குப்பை அள்ளும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினர். முதலமைச்சரிடம் ஐந்து புரோக்கர்கள் உள்ளதாகவும் அவர்கள் முதலமைச்சர் எந்த கோப்பில் கையெழுத்து இடுகிறாரோ அந்த கோப்பு சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஃபோன் மூலம் பணம் பெற்று முதலமைச்சருக்கும் பங்கு கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
ஆளுநர்கள் பிரதமரின் அடியாட்களாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராது நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தல்களை தள்ளிப் போட மோடி பார்க்கும் வேலை தான் இது அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | கர்நாடக அரசு மீது புகாரளிக்க தமிழ்நாடு அரசு திட்டம்...!