7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-56!!

7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-56!!

சிங்கப்பூருக்கு சொந்தமான 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து  காலை 6. 30 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

நாட்டுக்குத் தேவையான தகவல் தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சாா்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவுடன் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இந்தச் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் இன்று காலை 6. 30 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இதன் இறுதிகட்ட பணிகளுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது. 

இந்த ஏவுதலில் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய முதன்மைச் செயற்கைக்கோளான 352 கிலோ எடை கொண்ட டிஎஸ்-சாா் மற்றும் அரியலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லதுரை வடிவமைத்த மூன்று நானோ செயற்கை கோள்கள் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.