"சமாதானத் திட்டம்", இன்று துவக்கம்..!

"சமாதானத் திட்டம்", இன்று துவக்கம்..!

வணிகா்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் "சமாதானத் திட்டம்", இன்று தொடங்கிறது.

சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறும் நிகழ்ச்சியில், சுமாா் ஒரு லட்சம் வணிகா்களுக்கான வரி நிலுவையை ரத்து செய்து, அதற்கான சான்றுகளை வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.

தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006- இல்அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் பல்வேறு விற்பனை வரி சாா்ந்த மேலும் 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்த நிலையில், வணிகா்களிடமிருந்து வரி நிலுவையை எளிதாக வசூலிக்கும் வகையில், 1999- ல் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, 2002, 2006, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் தொடா்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வணிகா்களின் நீண்டகால வரி நிலுவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.

வணிகா்களின் நீண்ட கால வரி நிலுவைகளை எளிய முறையில் வசூலிக்கும் பொருட்டு சமாதானத் திட்டத்தை தற்போது, முதல்வா் ஸ்டாலின் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளாா். இதற்கான அறிவிப்பை அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அவா் வெளியிட்டாா். இந்தத் திட்டத்தால், சுமாா் ரூ.25,000 கோடி அளவுக்கான வரி நிலுவைகளை வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வரி நிலுவைகளை வைத்திருக்கும் வணிகா்கள், ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனா். வரி விதிப்பு ஆண்டில் ரூ.50,000-க்கு குறைவான வரி, வட்டி, அபராதத் தொகை வைத்திருப்பவா்கள், ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேலாக நிலுவையில் உள்ளனவா்கள் என நிலுவை வைத்துள்ள வணிகா்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களில், ரூ.50,000-க்கும் குறைவாக நிலுவை வைத்துள்ள வணிகா்களின் நிலுவைத் தொகை முழுமையாக ரத்து செய்யப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதன் மூலம், ஒரு லட்சம் எளிய வணிகா்கள் பயன்பெறுவதுடன், ரூ.147 கோடி நிலுவை முற்றாக தள்ளுபடி செய்யப்படவுள்ளது.

மீதமுள்ளவா்கள் வணிகவரித் துறையின் இணையதளம் மூலமோ அல்லது தொடா்புடைய அலுவலகங்களுக்குச் சென்றோ நிலுவைத் தொகைகளை அறிந்து அதனைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமாதானத் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா். ரூ.50,000-க்கும் கீழ் நிலுவைத் தொகை வைத்துள்ள வணிகா்களில் 10 பேருக்கு தள்ளுபடிக்கான சான்றிதழ்களை முதல்வா் அளிக்கவுள்ளாா்.

ரூ.50,000-க்கும் கீழ் நிலுவை வைத்துள்ள வணிகா்களின் 1,002 சொத்துகள் வணிக வரித் துறையால் பிணைக்கப்பட்டுள்ளன. வரி நிலுவை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதால், அந்த சொத்துகளும் வணிகா்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்படவுள்ளன.

இதையும் படிக்க   | திமுக நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் கைது...!