இராணுவத்தினருக்கு ஒரு கட்சி மட்டும் மரியாதை கொடுப்பதில்லை...அண்ணாமலை குற்றச்சாட்டு!

இராணுவத்தினருக்கு ஒரு கட்சி மட்டும் மரியாதை கொடுப்பதில்லை...அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் ராணுவத்தினருக்கு குறிப்பிட்ட ஒரு கட்சி மட்டும் மரியாதை கொடுப்பதில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக பிரமுகரால் ராணுவ வீரர் பிரபு அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கடுமையாகச் சாடினார். 

உயிரை துச்சம் என நினைத்து எல்லையில் காக்கும் வீரர்களுக்கு இங்கிருந்தே நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்த அண்ணாமலை, ராணுவ வீரர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தருவதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், லாப நஷ்ட கணக்கு போட்டு அதன் பிறகு உதவி செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகள் நினைப்பதாக சாடினார். 

இதையும் படிக்க : திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு...பகிரங்க மிரட்டல் விடுத்த கர்னல் பாண்டியன்...!

தொடர்ந்து, புல்வாமா தாக்குதல் குறித்து குறிப்பிட்ட அண்ணாமலை, 40 வீரர்களின் மரணத்திற்கு பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்த பிரதமர் மோடி, பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தனை 24 மணி நேரத்திற்குள் மீட்டபோது ஒரு இந்தியனாக செயல்பட்டார் என்று கூறினார். ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு பாதுகாப்பு என்றாலோ, அக்னி 5 என்றாலோ என்னவென்றே தெரியாது என்று விமர்சித்தார்.

இதனையடுத்து சென்னை சிவானாந்தா சாலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை, அண்ணாமலை தலைமையில் ஏராளமான  பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.