பல் பிடுங்கிய பல்வீர்சிங் வழக்கு; சிபிசிஐடி குற்றப்பத்திரிகை; கிடப்பில் போட்ட தமிழ்நாடு அரசு?

பல் பிடுங்கிய பல்வீர்சிங் வழக்கு; சிபிசிஐடி குற்றப்பத்திரிகை; கிடப்பில் போட்ட தமிழ்நாடு அரசு?

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீந்தர் சிங் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது விசாரணை முடிந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை கருங்கற்களால்  உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் ரத்தம் வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கினார் என்ற புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக சி.பி.சி.ஐ.டி விசாரணை முடித்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வில்லை. எனவே விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், டி.ஜி.பி க்கும் அறப்போர் இயக்கம் மனு அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "திருநெல்வேலி அம்பாசமுத்திரம் ASP யாக பணியாற்றிய பல்வீர் சிங்க் IPS மற்றும் இதர காவலர்கள் பலரது பற்களை பிடுங்கி சித்திரவதை செய்தது மார்ச் மாதம் வெளிவந்தது. ஏப்ரல் மாதம் இந்த விசாரணை CBCID க்கு மாற்றப்பட்டது. 4 FIR கள் வரை போடப்பட்டது. ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல்வீர் சிங்க் கைதும் செய்யப்படவில்லை. CBCID விசாரணை முடித்து விட்டதாகவும் தமிழ்நாடு அரசு உள்துறை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளிப்பதில் தாமதம் இருப்பதாக கேள்விப்பட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அதன் நிலையை கேட்டோம். ஆனால் அது ரகசியம் என்று கூறி வழக்கின் நிலை குறித்து தகவல் தர முடியாது என்று அரசு பதில் அளித்து உள்ளது. இது போன்ற அப்பட்டமான வழக்கில் கூட அரசு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க விரும்பவில்லை. மேலும் சில IPS அதிகாரிகள் அழுத்தமும் அரசுக்கு இருப்பதாக கேள்விப்படுகிறோம். எனவே அரசு உடனடியாக பல்வீர் சிங்க் மற்றும் மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இனியும் தாமதிக்காமல் உடனே CBCID க்கு அனுமதி தரும் படி கோரி இன்று மனு அனுப்பி உள்ளோம்" எனக் கூறியுள்ளனர்.

இதுத் தொடர்பாக முதல்வர், உள்துறை செயலர் மற்றும் DGP க்கு மனு அனுப்பியுள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com