ஜனநாயகத்திற்கு வாக்கு கேட்டு, மன்னராட்சியை புறவழியில் மலர வைத்திருப்பதே முதலமைச்சரின் சாதனை என்று தென்காசியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில், அதிமுகவின் 51வது பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், ஏழை, எளியயோர்களில் 51 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனுடன் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமாரின் மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. மதுரையில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற உள்ள திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் மாவட்டம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ள 51 ஜோடிகளின் திருமண விழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அதற்கான அழைப்புகள் மாவட்டம் தோறும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அதிமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்கும் போது தி.மு.க ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு சென்றது. அதிமுக அரசு பொறுப்பேற்று 10 ஆண்டுகளில் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கி, சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டம், கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் என அனைத்து திட்டங்களும், கடன் வரையறை மற்றும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். தி.மு.க கொடுத்த 505 வாக்குறுதிகள், மகளிருக்கு 1000 ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, வேளாண் பட்ஜெட், மானிய கோரிக்கைகளில் அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி என எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்திற்கு வாக்கு கேட்டு, மன்னர் ஆட்சியை புறவழியில் மலர வைத்ததே இவர்களுடைய சாதனை. தந்தைக்கு நினைவை போற்றுகின்ற வகையில் நூலகம், மகனுக்கு வழியமைத்து கொடுக்கிறார் தமிழக முதலமைச்சர் என்று கூறினார்.
இதையும் படிக்க : 2- வது தேசிய மாநாடு....! டெல்லியில் இன்று தொடக்கம்...!