"ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி" முதல்வர் குற்றச்சாட்டு!

"ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி" முதல்வர் குற்றச்சாட்டு!

"ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி"  என குற்றம்சாட்டி தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட திமுக அரசுக்கும் இடையே பல்வேறு மோதல் நிலவி வருகிறது.  சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால், அது தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

அது போக, அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது ஆளுநர் கருத்து தெரிவிப்பது, ஆளும் திமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெளிநாட்டு பயணங்கள் செல்வதால் மட்டும் முதலீடுகள் வந்து விடாது என, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் பேசியிருந்ததும், அதற்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்ததும், மோதல் போக்கை இன்னும் அதிகரித்தது.

இந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்தார்.  அடுத்த சில நாட்களில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக அறிவித்தார். 

உடனே, ஆளுநருக்கு இப்படி ஒரு அதிகாரம் கிடையாது எனவும், ஆளுநரின் முடிவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழ் நாடு அரசு அறிவித்தது. எனினும், 5 மணி நேரத்தில், ஆளுநர் தனது உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், திடீர் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் சூழல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், முதலமைச்சா் மு.க ஸ்டாலின் குடியரசு தலைவா்  திரவுபதி முர்முவுக்கு 19 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாநிலத்தின் அரசியல் மற்றும் கருத்தியலுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், ஆளுநர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என்றும், இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் கூட நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும் என தொிவித்துள்ள முதலமைச்சர், அரசியல்வாதியாக மாறும் ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது என கூறியுள்ளார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் செயல்பாடு உள்ளது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆளுநர் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், பொதுவெளியில் மதக் கருத்துக்களை ஆளுநர் பரப்பி வருவதாக தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆர்.என்.ரவியின் செயல்பாடு தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக உள்ளதாகவும் குற்றம் சாட்டி, விரிவான கடிதம் ஒன்றை, குடியரசுத் தலைவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க:தமிழி எழுத்தில் நாலடியாரை எழுதி சாதனை: சபாநாயகர் வாழ்த்து!