தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 10 மணி நேரத்தை கடந்தும் தொடர் மழை பெய்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும், இது கடந்த 73 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவு எனவும் கூறினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த பாலச்சந்திரன், தமிழ்நாட்டிற்கான தென்மேற்கு பருவமழை இயல்பை விட 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிக்க:பல்வேறு இடங்களில் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!