போலீசுக்கே விபூதி அடிக்க நினைத்த மாந்திரீக கொள்ளையர்!

Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மாந்திரீக கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி நடைபெறும் இடங்களில் விபூதி குங்குமம் மற்றும் எலுமிச்சம் பழம் உள்ளிட்ட மாந்திரப் பொருட்களை கொள்ளையர்கள் விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதனிடையே குடியாத்தம் நகர போலீசார் இன்று குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரி கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரை குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் நேதாஜி (38) என்பதும் கல்லூர் ஒரு பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 13 இடங்களில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. 

மேலும் திருடிய பணத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் செலவு செய்து பெரம்பலூர் மாவட்டத்தில் மாந்திரீகம் கற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் திருட செல்லும் இடத்தில் போலீஸிடம் சிக்காமல் இருக்க வீபுதி குங்குமம் உள்ளிட்டவை வைத்து மாந்திரீகம் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அந்நபர் திருடிய சாமி படம், ஃப்ரிட்ஜ், மின்விசிறி, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குடியாத்தம் நகர போலீசார் மேலும் இது குறித்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com