விருத்தாசலம், கும்பகோணம் தனி மாவட்டம்...! உடனடியாக உருவாக்க சீமான் வலியுறுத்தல்...!!

விருத்தாசலம், கும்பகோணம் தனி மாவட்டம்...! உடனடியாக உருவாக்க சீமான் வலியுறுத்தல்...!!

விருத்தாசலம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னாற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட 1993 ஆம் ஆண்டிலிருந்தே விருத்தாச்சலம் தனி மாவட்ட கோரிக்கையானது முன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், விருத்தாச்சலம் நகராட்சியாக்கப்பட்டது முதல் ஏறத்தாழ 30 ஆண்டுகாலமாக, தனிமாவட்டம் வேண்டி அப்பகுதி மக்கள் பல்வேறு அறப்போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலமான 1866 ஆம் ஆண்டு முதலே நகராட்சியாக இருந்துவரும் கும்பகோணமானது, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்துக் கழகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது மாநகராட்சியாகவே தரம் உயர்ந்துவிட்ட நிலையிலும், கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மறுப்பது மாபெரும் அநீதியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விருத்தாச்சலம் மற்றும் கும்பகோணத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், தொடர்வண்டி நிலையங்கள், வருவாய் கோட்டங்கள் என்று மாவட்டக் கட்டமைப்பிற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய கட்டமைப்புகள் ஏதுமில்லாது, மிக மிக பின்நாட்களில் உருவான பல நகரங்கள் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்படும் நிலையில், இவ்விரு நகரங்களின் தனி மாவட்டக்கோரிக்கை மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல கூறியுள்ளார்.Cuddalore district map. | Download Scientific Diagram

தொடர்ந்து, கடலூரிலிருந்து, விருத்தாச்சலம் 60கிமீ தொலைவிலும், சிறுபாக்கம், லட்சுமணாபுரம், அரசங்குடி கிராமங்கள் 120கிமீ தொலைவிலும் அமைந்திருப்பதால், அரசு அலுவல் பணிகளுக்கும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளிப்பதற்கும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அன்றாடப் பணிகளை முழுநாள் தள்ளி வைக்கவும், பணிவிடுப்பு எடுக்கவும் வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், உயர் அதிகாரிகளால் அடிக்கடி அலைக்கழிக்கப்படும்போது விவசாயிகளும், கூலித்தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதோடு, தொலைவு காரணமாக மாவட்டத்தின் கடைக்கோடி கிராமப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் மிக தாமதமாகவே சென்றடைவதால், அப்பகுதிகள் இன்றளவும் வளர்ச்சியடையாமல் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார். Thanjavur Taluk - Wikipedia

ஆகவே, திமுக அரசு இனியும் கால தாமதம் செய்து, நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றாமல், உடனடியாக விருத்தாசலம் மற்றும் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை உருவாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.